மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள பல்கலைக்கழகத் தேர்வொன்றில், மாணவர்கள் எவ்வித அச்சமுமின்றி புத்தகங்கள் மற்றும் செல்போன்களைப் பார்த்துத் தேர்வு எழுதும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவாலியரில் உள்ள ஒரு அரசு மாதிரி பள்ளியில் கடந்த சனிக்கிழமை பி.ஏ (BA) மற்றும் பி.எஸ்சி (BSc) இரண்டாம் ஆண்டுத் தேர்வுகள் நடைபெற்றன. அப்போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோவில், மாணவர்கள் தேர்வு அறையில் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டும், புத்தகங்கள் மற்றும் மொபைல் போன்களைப் பார்த்துப் பதில்களை எழுதியும் முறைகேட்டில் ஈடுபடுவது அப்பட்டமாகத் தெரிகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH | Video Shows Students Cheating During BA–BSc Second-Year Exam At Gwalior's Known University; NSUI Stage Protest #MPnews #MadhyaPradesh pic.twitter.com/2o2JEXMC8L
— Free Press Madhya Pradesh (@FreePressMP) March 31, 2026
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் (NSUI), மாவட்டத் தலைவர் பராஸ் யாதவ் தலைமையில் பல்கலைக்கழகப் பதிவாளர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். “பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஆசிர்வாதத்துடனேயே இந்த முறைகேடு நடந்துள்ளது” என அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த தேர்வு முறைகேடு குறித்து NSUI நிர்வாகிகள் எழுப்பியுள்ள முக்கிய புகார்கள், குறிப்பிட்ட ஒரு தனியார் கல்லூரி (சாந்தி தேவி கல்லூரி) மாணவர்களுக்கு உதவுவதற்காக, தேர்வு மையம் கடைசி நேரத்தில் தொலைதூரப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பல்கலைக்கழகப் பதிவாளர் ராஜீவ் மிஸ்ராவின் அறிவுறுத்தலின் பேரில் தான் இந்த மையம் மாற்றப்பட்டது என்றும், முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகி பதிவாளரின் நெருங்கிய உறவினர் என்றும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் முறைகேடு குறித்த வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் சமர்ப்பித்த மாணவர் சங்கத்தினர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கல்லூரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். நடவடிக்கை எடுக்கத் தவறினால், தலைநகர் போபாலில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
