உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரின் சர்வத் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது சர்வத் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நான்கு பேர் சடலங்களாகக் கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. உயிரிழந்தவர்கள் இர்ஷாத் (32), அவரது மனைவி நோரின் மற்றும் அவர்களது இரண்டு சிறு குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இர்ஷாத்தின் உடல் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் உடல்கள் தரையிலும் கிடந்தன.

தகவலறிந்து தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், நான்கு உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இர்ஷாத் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக, வரவிருக்கும் பண்டிகை தொடர்பான ஏதோ ஒரு விவகாரத்தில் தம்பதியிடையே கடும் வாக்குவாதம் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.