உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூரில், 7 வயது சிறுவன் ஒருவன் மீது திருட்டுப் பழி சுமத்தி, அவனை குளிர்சாதனப் பெட்டிக்குள் (Deep Freezer) பூட்டி வைத்து சித்ரவதை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாப்பூர் மாவட்டம், தௌலானா பகுதியில் உள்ள ஷேக்ஸ்பூர் கிச்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் இம்ரான். இவரது 7 வயது மகனை, அதே கிராமத்தைச் சேர்ந்த ஆசாத் என்பவர் பிடித்துச் சென்றுள்ளார். சிறுவன் ஏதோ திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டிய ஆசாத், தண்டனை என்ற பெயரில் அச்சிறுவனை ஒரு ‘டீப் ஃப்ரீசர்’ பெட்டிக்குள் தள்ளி வெளியே பூட்டியுள்ளார். உறைபனி நிலையில் இருந்த அந்தப் பெட்டிக்குள் மூச்சு விடக் கூட முடியாமல், கடுமையான குளிரில் அச்சிறுவன் பல மணி நேரம் உயிருக்குப் போராடியுள்ளான்.

சிறுவன் நீண்ட நேரமாகப் பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருப்பதை அறிந்த கிராம மக்கள், உடனடியாகத் திரண்டு வந்து அந்த நபர் பிடியிலிருந்து சிறுவனை மீட்டனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தகவலறிந்த சிறுவனின் தந்தை இம்ரான் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்கப்பட்ட சிறுவன் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தான்.

பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உடனடி மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இம்ரான் அளித்த புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட ஆசாத் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஆசாத்தைக் கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு சிறு குழந்தைக்கு எதிராக இத்தகைய கொடூரத்தை இழைத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.