உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா தனது ஏவுகணைத் திறனை மேம்படுத்தும் வகையில் அதிநவீன ‘திட-எரிபொருள்’ (Solid-fuel) ஏவுகணை என்ஜினை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்தச் சோதனை நேரடியாக அமெரிக்காவைத் தாக்கும் இலக்கைக் கொண்டு நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்தப் புதிய ஏவுகணை என்ஜின் சோதனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சோதனையின் முடிவுகள் திருப்திகரமாக இருந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு ராணுவ விஞ்ஞானிகளுக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்தச் சோதனையில் மிக முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுவது அதன் உந்துவிசை (Thrust) ஆகும். இது குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணைகளின் உந்துவிசையை 2,500 கிலோ நியூட்டன் வரை இந்த புதிய தொழில்நுட்பம் அதிகரித்துள்ளது.

திரவ எரிபொருளை விட திட-எரிபொருள் கொண்ட ஏவுகணைகளை மிக விரைவாக ஏவ முடியும். இதனால் எதிரி நாடுகள் கண்டறியும் முன்பே தாக்குதல் நடத்த வடகொரியாவிற்கு இது வழிவகை செய்யும்.

இந்த அதிவேக உந்துவிசைத் திறன் மூலம், அமெரிக்காவின் எந்தவொரு பகுதியையும் மிகக் குறுகிய காலத்தில் துல்லியமாகத் தாக்கும் வலிமையை வடகொரியா நிரூபித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வடகொரியாவின் இந்தத் தொடர் ஏவுகணைச் சோதனைகள் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தத் தொழில்நுட்பப் பாய்ச்சல், சர்வதேச பாதுகாப்புச் சூழலில் புதிய சவால்களை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது.