நேபாளத்தின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள பாலென் ஷா, நாட்டின் கல்வி முறையை அரசியலில் இருந்து விடுவிக்கும் நோக்கில் ‘100 நாள் புரட்சிகர செயல்திட்டத்தை’ சனிக்கிழமை இரவு வெளியிட்டார். கல்வி நிறுவனங்களை வெறும் அறிவு மையங்களாக மாற்றுவதும், சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதுமே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய முடிவாக, அனைத்துப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய மாணவர் சங்கங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 60 நாட்களுக்குள் இச்சங்கங்கள் தங்களது அலுவலகங்களை கல்வி வளாகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசியலுக்குப் பதிலாக, மாணவர்களின் உண்மையான குறைகளைக் கேட்டறிய அடுத்த 90 நாட்களில் ‘மாணவர் கவுன்சில்’ அல்லது ‘மாணவர் குரல்’ போன்ற அரசியல் சார்பற்ற அமைப்புகள் உருவாக்கப்படும்.

நேபாளத்தின் உள்ளூர் அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில், வெளிநாட்டுப் பெயர்களில் இயங்கும் கல்வி நிறுவனங்களுக்குக் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி:

‘ஆக்ஸ்போர்டு’, ‘பென்டகன்’ மற்றும் ‘செயிண்ட் சேவியர்ஸ்’ போன்ற பெயர்களில் இயங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், இனி தங்களது பெயர்களை நேபாளப் பெயர்களாக மாற்ற வேண்டும்.

சிறுவர்கள் மீதான தேர்வுச் சுமையைக் குறைக்க, 5-ஆம் வகுப்பு வரை வழக்கமான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்குப் பதிலாக ‘மாற்று மதிப்பீட்டு முறை’ (Alternative Evaluation) அறிமுகப்படுத்தப்படும்.

பட்டப்படிப்பு வரையிலான கல்விக்கு நேபாளக் குடியுரிமைச் சான்றிதழ் கட்டாயம் என்ற விதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆவணங்கள் இல்லாத காரணத்தால் யாருடைய கல்வியும் தடைபடாது.

அரசியல் தலையீட்டால் தேர்வு முடிவுகள் தாமதமாவதைத் தவிர்க்க, அமைச்சகம் நிர்ணயிக்கும் கல்வி நாட்காட்டியின்படி (Academic Calendar) குறித்த காலத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கல்வித்துறையில் நிலவிய அரசியல் தலையீடுகளால் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலை இருந்தது. தற்போது பிரதமர் எடுத்துள்ள இந்த ‘அதிரடி’ முடிவுகள் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளன.

மேலும் அதே நேரத்தில் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய மாணவர் சங்கங்களை கலைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது கடும் எதிர்ப்பையே சந்திக்கிறது. மாணவர்களின் அரசியல் ஆர்வத்தை கலைக்கும் விதமாக இது இருப்பதாக பல்வேறு மாணவர் அமைப்பினர் குற்றம் சாட்டின் நிலையில் இந்த முடிவு நெருப்பின் மீது கை வைப்பதற்கு சமம் என்றும் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.