எதிர்காலப் போர்களை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தனது டாங்கிப் படைப்பிரிவுகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தை இணைத்து, ‘சௌர்யா ஸ்குவாட்ரன்’ எனும் புதிய பிரிவை உருவாக்கியுள்ளது. உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போர்களில் டாங்கிகள் மட்டும் போதாது, ட்ரோன்களின் பங்களிப்பு அவசியம் என்பது நிரூபிக்கப்பட்டதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது சுமார் ஆறு சௌர்யா படைப்பிரிவுகள் தயார் செய்யப்பட்டு பல்வேறு கட்டளை மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தின் பாபினாவில் நடைபெற்ற ‘அமோக் ஜ்வாலா’ பயிற்சியின் போது, டாங்கிகளுடன் இணைந்து ட்ரோன்கள் எதிரி இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் வலிமை நிரூபிக்கப்பட்டது.
இந்தச் சௌர்யா படைப்பிரிவானது போர்க்களத்தின் முன்வரிசையில் சுமார் 10-12 டாங்கிகளுடன் இணைந்து செயல்படும். இதில் உள்ள வீரர்களுக்கு ட்ரோன்களை இயக்குவதில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுவதோடு, கண்காணிப்பு மற்றும் தாக்குதல் நடத்தும் நவீன ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவை எதிரியின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது மட்டுமின்றி, மின்னணுப் போர்முறை, கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் மருத்துவ உதவி போன்ற பணிகளுக்கும் பயன்படுத்தப்படும். இந்திய ராணுவத்திடம் உள்ள டி-90 பீஷ்மா மற்றும் அர்ஜுன் போன்ற 5,000-க்கும் மேற்பட்ட டாங்கிகளின் தாக்குதல் திறனை இந்த ட்ரோன் தொழில்நுட்பம் பலமடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
