நாடு முழுவதும் தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கூடுதல் கல்விக்கட்டணம் பெரும் பிரச்சனையாக நீடித்து வரும் நிலையில், தற்போது பாடப்புத்தகங்களின் விலையும் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளப் பக்கமான ‘X’-இல் கல்விச் செலவுகள் குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஒரு பக்கம் கல்விக்கட்டணம் உயர்ந்து வரும் நிலையில், மறுபுறம் பாடப்புத்தகங்களை அதிக விலைக்கு விற்கப்படும் சுமையை சுமக்க முடியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான தகவலின்படி, ஒரு தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தின் விலை மட்டும் ரூ. 1,035 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய அளவில் பெரும் விவாதத்தையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.
லக்னோவில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளியின் (City Montessori School) கேம்பிரிட்ஜ் பிரிவில், ‘பர்லிங்டன்’ (Burlington) வரிசைப் புத்தகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் ஒரு புத்தகத்தின் விலையே ஆயிரத்தைத் தாண்டும் நிலையில், முழு புத்தகத் தொகுப்பின் விலை ரூ. 8,000-ஐ கடப்பதாகக் கூறப்படுகிறது. இது போன்ற நடைமுறை ஒரு சில பள்ளிகளோடு நின்றுவிடாமல், பெரும்பாலான முன்னணி தனியார் பள்ளிகளில் வாடிக்கையாகிவிட்டது என்பதுதான் கசப்பான உண்மை.
₹1035 for a Class 5 English Book Parents Raise Concerns Over Rising School Costs
pic.twitter.com/geBZ0u3Acs— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 25, 2026
தனியார் பள்ளிகளின் இந்த ‘கல்வி வணிகத்தை’ நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது குறித்து இணையவாசி ஒருவர் கூறுகையில்: “அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளிலும் NCERT பாடப்புத்தகங்களை கட்டாயமாக்க வேண்டும். NCERT புத்தகங்கள் ரூ. 50 முதல் ரூ. 100-க்குள் கிடைக்கின்றன. ஆனால், இதில் பள்ளிகளுக்கு லாபம் கிடைக்காது என்பதால், அவர்கள் தனியார் பதிப்பகங்களுடன் கைகோர்த்து ரூ. 500 முதல் ரூ. 1000 வரை விலை கொண்ட புத்தகங்களை திணிக்கின்றனர்.”
பொருளாதார நெருக்கடி மிகுந்த இக்காலகட்டத்தில், பாடப்புத்தக விற்பனையாளர்கள் இவ்வளவு கூடுதல் விலையை வசூலிப்பதைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்துகின்றனர். தில்லி அரசு சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்த போதிலும், ‘பள்ளி அளவிலான கட்டண ஒழுங்குமுறைக் குழுக்களை’ (SLFRCs) அமைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருவதால், அதன் அமலாக்கம் தில்லி உயர்நீதிமன்றத்தால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது பெற்றோரின் போராட்டத்தை மேலும் சவாலானதாக மாற்றியுள்ளது.
மேலும் தனியார் பள்ளிகள் ‘பாதி கல்வி, பாதி வணிகம்’ என்ற நோக்கில் செயல்படுவதைத் தடுத்து, புத்தக விலையைக் கட்டுப்படுத்த ஒரு வலுவான ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்பதே தற்போது கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
