சமூக வலைதளங்களில் தினந்தோறும் விசித்திரமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு புகைப்படம் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. ஒரு குடும்பம் மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்ட ‘செல்ஃபி’ புகைப்படத்தில், மரணம் மிக அருகில் காத்திருந்தது பின்னரே தெரியவந்துள்ளது.
அதாவது இளம் தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் ஆற்றங்கரைக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். இதமான வானிலை, குழந்தைகளின் சிரிப்பு என அந்தத் தருணம் மிகவும் இனிமையாக அமைந்தது. அந்த நினைவுகளைச் சேகரிக்க, ஒட்டுமொத்தக் குடும்பமும் இணைந்து ஒரு அழகான ‘ஃபேமிலி செல்ஃபி’ எடுத்துக்கொண்டனர். புகைப்படத்தில் அனைவரும் புன்னகையுடன் காட்சியளித்தனர். ஆனால், அந்தப் புன்னகைக்கு மிக அருகிலேயே ஆபத்து பதுங்கியிருந்தது அந்த நிமிடம் யாருக்கும் தெரியவில்லை.
சுற்றுலாவை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய அந்தத் தாய், தனது மொபைலில் இருந்த புகைப்படங்களைப் பார்த்தபோது உறைய வைக்கும் காட்சியைக் கண்டு அலறினார். புகைப்படத்தில் அவரது மூத்த மகனின் காலடிக்கு மிக அருகிலேயே ஒரு பெரிய பாம்பு மறைந்திருந்தது தெளிவாகத் தெரிந்தது. தண்ணீருக்குள் பாதி உடல் மறைந்த நிலையில், அந்தப் பாம்பின் தலை சிறுவனின் கால்களைக் குறிவைப்பது போல் இருந்தது. சிறுவன் ஒரு அடி முன்னால் வைத்திருந்தாலோ அல்லது அந்தப் பாம்பு லேசாக அசைந்திருந்தாலோ மிகப்பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும். தெய்வாதீனமாக அந்தக் குடும்பம் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளது.
இந்தத் திடுக்கிடும் புகைப்படத்தைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்த அந்த நபர், “ஒரு நொடி மகிழ்ச்சி.. ஆனால் அதன் பின்னால் மறைந்திருந்ததை பாருங்கள்!” எனப் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த இணையவாசிகள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அதன்படி “கடவுள் தான் உங்களைக் காப்பாற்றியுள்ளார். “ஆற்றங்கரையில் குழந்தைகளைத் தனியாக விடாதீர்கள். “பாம்பைப் பார்த்தாலே நெஞ்சு படபடக்கிறது” எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
பாம்பு ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “ஆற்றங்கரைகளில் புற்கள் மற்றும் கற்களுக்கு இடையே இது போன்ற பாம்புகள் இரைக்காகக் காத்திருப்பது வழக்கம். மழைக்காலங்களில் இவற்றின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்,” என எச்சரிக்கின்றனர். மேலும் பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்லும்போது செல்ஃபி எடுக்கும் ஆர்வத்தில் சுற்றுப்புறத்தைக் கவனிக்கத் தவறுவது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காடுகள், ஆறுகள் அல்லது மலைப் பகுதிகளுக்குச் செல்லும்போது காலணிகளை அணிவது அவசியம் என்றும், குழந்தைகளை புதர்கள் நிறைந்த இடங்களுக்கு அருகே தனியாக விடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
