சமூக வலைதளங்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தப் பலரும் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் எடுக்கப்படும் வீடியோக்கள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது பரதநாட்டியக் கலைஞர் ஒருவர் பொது இடத்தில் ஆடிய நடனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியர்களின் அன்றாட வாழ்வின் அங்கமாகத் திகழும் ரயில் நிலையங்கள், பொதுவாக பரபரப்புக்கும் நெரிசலுக்கும் பெயர்போனவை. ஆனால், அங்கே ஒரு கலை நிகழ்ச்சி நடந்தால் எப்படி இருக்கும்? @teamanartana என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில், இளம் பெண் ஒருவர் பாரம்பரிய சேலை அணிந்து, ரயில்வே நடைமேடையில் உள்ள நகரும் படிக்கட்டில் (Escalator) நின்றபடி மிக நேர்த்தியாகப் பரதநாட்டியம் ஆடுகிறார்.
பொது இடங்களில் ரீல்ஸ் (Reels) எடுப்பதற்காகப் பலரும் அருவருக்கத்தக்க வகையிலோ அல்லது மற்றவர்களுக்கு இடையூறு தரும் வகையிலோ நடனமாடி வரும் நிலையில், இந்தப் பெண்ணின் முயற்சி முற்றிலும் மாறுபட்டுள்ளது. பாரம்பரிய உடை அணிந்து, முகத்தில் அழகான பாவங்களுடன், நகரும் படிக்கட்டிலேயே பரதநாட்டிய முத்திரைகளை அவர் செய்த விதம் அங்கிருந்த பயணிகளை வியப்பில் ஆழ்த்தியது. இந்த வீடியோ பகிரப்பட்ட சில நாட்களிலேயே 5 மில்லியனுக்கும் (50 லட்சம்) அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இணையவாசிகள் பலரும் அந்தப் பெண்ணின் திறமையைப் பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram
“இதுதான் உண்மையான இந்திய அழகு,” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். “பொது இடங்களில் நாகரிகமான முறையில் கலையை வெளிப்படுத்துவது பாராட்டுக்குரியது,” என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். “இவரைத்தான் உண்மையான கலைஞர் என்று சொல்ல வேண்டும்,” எனப் பலரும் புகழ்ந்து தள்ளுகின்றனர். மேலும் பரபரப்பான சூழலில் கலைத் திறமையால் அந்த இடத்தையே ஒரு மேடையாக மாற்றிய அந்தப் பெண்ணின் வீடியோ, தற்போது ‘இந்தியப் பெண்மை’ மற்றும் ‘பாரம்பரியக் கலை’ என்ற பெயரில் வைரலாகி வருகிறது.
