ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக இந்தியா கடுமையான எரிசக்தி மற்றும் உணவுப் பொருள் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால், இந்தியாவிற்கு வர வேண்டிய இயற்கை எரிவாயு மற்றும் எல்பிஜி சிலிண்டர் விநியோகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இதனால் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை அதிகரிப்பதோடு, தொழிற்சாலைகளுக்குத் தேவையான வணிக ரீதியான எரிவாயுவும் தட்டுப்பாடின்றி கிடைப்பதில்லை. இது இந்தியத் தொழில்துறையில் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருவதோடு, சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவில் சமையல் எண்ணெய்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் (பிப்ரவரி 24 – மார்ச் 24, 2026) சூரியகாந்தி எண்ணெயின் விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து 185 ரூபாயைத் தொட்டுள்ளது.
அதேபோல் பாமாயில், சோயாபீன், கடலை எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் ஆகியவற்றின் விலையும் கிலோவுக்கு 3 முதல் 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. போர்ச் சூழல் இப்படியே நீடித்தால், வரும் காலங்களில் சமையல் எண்ணெய் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் உயர்ந்து பெரும் உணவு நெருக்கடியை உருவாக்கும் என்று அஞ்சப்படுகிறது.
