சாத்தான்குளம் வழக்கில் காவலர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதை அதிமுக வரவேற்றுள்ளது. இந்த வழக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் எவ்வித ஒளிவுமறைவுமின்றி சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதாலேயே இன்று நீதி கிடைத்துள்ளதாக அதிமுக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக அரசு சமர்ப்பித்த வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வந்துள்ள நிலையில், இதில் திமுக உரிமை கொண்டாடுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்று அக்கட்சி விமர்சித்துள்ளது.
கடந்த 2021 முதல் திமுக ஆட்சியில் 30-க்கும் மேற்பட்ட காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகச் சாடியுள்ள அதிமுக, இதுவே ஸ்டாலின் அரசின் நிர்வாகச் சீர்கேட்டிற்குச் சாட்சி என்று கூறியுள்ளது. விக்னேஷ் என்ற இளைஞரின் மரணத்தைச் சட்டமன்றத்திலேயே வயிற்றுப்போக்கு எனப் பொய் சொல்லி மறைக்கத் துணிந்தவர் முதல்வர் ஸ்டாலின் என்று அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஜெய்பீம் படம் பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் தூங்கவில்லை என்று கூறிய முதல்வரின் உள்ளம், சொந்த ஆட்சியில் நடக்கும் அநீதிகளைக் கண்டு ஒருமுறை கூட உருகவில்லை என அதிமுக கடுமையாகச் சாடியுள்ளது.
திமுக ஆட்சியில் காவல்துறை அராஜகத்தால் உயிர்நீத்த விக்னேஷ், அஜித்குமார், தங்கமணி உள்ளிட்ட பலரின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க அதிமுக அரசு தொடர்ந்து போராடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் அமையவுள்ள அதிமுக அரசு, இந்த மரணங்களுக்குக் காரணமான குற்றவாளிகளை நிச்சயம் கூண்டில் ஏற்றும் என உறுதி அளித்துள்ளது. தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும் என்ற முழக்கத்துடன் அதிமுக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
