பாகிஸ்தான் சூப்பர் லீக் 2026 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. ஐபிஎல் தொடருக்குப் போட்டியாக அதே காலகட்டத்தில் பிஎஸ்எல் தொடரை நடத்தத் திட்டமிட்டதே இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரின் அதீத வரவேற்பு காரணமாக, பிஎஸ்எல் தொடரில் விளையாட வேண்டிய பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள் அதிலிருந்து விலகி வருகின்றனர். மேலும், ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்தைச் சுட்டிக்காட்டி, சில வீரர்கள் தங்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

தொடரிலிருந்து பாதியிலேயே விலகும் வீரர்கள் மீது 2 முதல் 4 ஆண்டுகள் வரை தடை விதிக்க வேண்டும் என அந்த நாட்டு உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவ்வாறு தடை விதித்தால் எதிர்காலத்தில் வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தானுக்கு வரமாட்டார்கள் என்ற அச்சமும் நிலவுகிறது.

ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜேக் ஃபிரேசர்-மெக்கர்க் போன்ற பல நட்சத்திர வீரர்கள் ஏற்கனவே விலகிவிட்ட நிலையில், இந்த விவகாரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம்  கொண்டு செல்ல பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. ஒருமுறை லீக்கில் விளையாட ஒப்பந்தமான பிறகு வீரர்கள் இடையில் விலகக் கூடாது என்ற புதிய விதியை உருவாக்க பாகிஸ்தான் போராடி வருகிறது.