பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வெளிநாட்டு வீரர்களுக்குப் பயங்கரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ‘தெஹ்ரிக்-இ-தலிபான்’ (TTP) அமைப்பின் ஒரு பிரிவான ‘ஜமாத் உல்-அஹ்ரார்’, பிஎஸ்எல் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பின் மூத்த தளபதி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “உங்கள் நாட்டு வீரர்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டாம்; மீறி வந்து ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

குறிப்பாக, ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டலையும் மீறி, கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னரும், முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக ஸ்டீவ் ஸ்மித்தும் பாகிஸ்தான் வந்து சேர்ந்துள்ளனர்.

இவர்களுடன் மார்னஸ் லபுஷேன், மொயீன் அலி, டெவோன் கான்வே மற்றும் ஆடம் ஜம்பா உள்ளிட்ட முன்னணி வெளிநாட்டு வீரர்களும் இத்தொடரில் பங்கேற்க உள்ளனர். வீரர்களின் பாதுகாப்பு குறித்து தற்போது சர்வதேச அளவில் கவலை எழுந்துள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் நாட்டின் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி  பிஎஸ்எல் போட்டிகள் அனைத்தும் ரசிகர்கள் இன்றி மூடிய மைதானத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக லாகூர் மற்றும் கராச்சி ஆகிய இரண்டு நகரங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெறும். ஆடம்பரமான தொடக்க விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிஎஸ்எல் 2026 தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி மொத்தம் 44 போட்டிகள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும்  மிரட்டல் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வரும் நிலையில், வெளிநாட்டு வீரர்கள் தொடர்ந்து இத்தொடரில் நீடிப்பார்களா அல்லது பாதியிலேயே வெளியேறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.