ஐபிஎல் 2026 தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஜிதேஷ் சர்மா பகிர்ந்துள்ள சுவாரஸ்யமான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, வரும் மார்ச் 27-ஆம் தேதி தனது 15-ஆவது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். கடந்த சீசனில் வெறும் 35 பந்துகளில் சதமடித்து கிரிக்கெட் உலகின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியவர். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து மண்ணில் சதங்களை விளாசியதுடன், அண்மையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில், தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் இந்திய வீரர் ஜிதேஷ் சர்மா ஆகியோர் வைபவ் குறித்து விவாதித்தனர். அப்போது ஜிதேஷ் சர்மா கூறுகையில், “எதிர்கால கிரிக்கெட்டை ஆளப்போகும் ஒரு வீரரிடம் ஒரு மில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டும் என்றால், நான் வைபவ் சூர்யவன்ஷியைத்தான் தேர்ந்தெடுப்பேன். அவரிடம் அபாரமான திறமையும், அதிரடியாக விளையாடும் ‘6-ஆவது கியர்’ வேகமும் உள்ளது” எனப் புகழ்ந்து தள்ளினார்.
இதற்குப் பதிலளித்த டி வில்லியர்ஸ், “நிச்சயமாக, 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் அவரது ஆட்டத்தைப் பார்த்திருக்கிறேன். அந்த வயதிலேயே அவர் மிகவும் தொழில்முறை (Professional) அணுகுமுறையுடன் விளையாடுவது ஆச்சரியமாக இருக்கிறது” என்றார். டி வில்லியர்ஸின் கருத்தை நகைச்சுவையுடன் மறுத்த ஜிதேஷ் சர்மா, வைபவ் சூர்யவன்ஷியின் விளையாட்டுக்கு வெளியே உள்ள பழக்கவழக்கங்கள் குறித்துப் பேசினார். அவர் கூறியதாவது,
“மைதானத்தில் அவர் சாதனைகளைத் தகர்க்கலாம். ஆனால், மைதானத்திற்கு வெளியே அவர் ஒருபோதும் முழுமையான ‘புரொபஷனலாக’ (Professional) மாறமாட்டார் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். எல்லோரும் அவரை மாற்ற முயல்கிறார்கள், நானும் முயல்கிறேன். ஆனால், அவருக்கு இப்போதும் ‘ராத்திரி நேரத்துல ஐஸ்கிரீம் சாப்பிடாதே’ என்று குழந்தையைப் போலச் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு அவர் இன்னும் வெள்ளந்தியாக இருக்கிறார் என்றார்.
மேலும் ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், வைபவின் பலவீனங்களைக் கண்டறிந்து அவரை வீழ்த்தப் பல அணிகளின் பந்துவீச்சாளர்கள் இப்போதே வியூகம் வகுத்து வருகின்றனர். இந்தச் சவால்களைச் சமாளித்து வைபவ் சூர்யவன்ஷி இந்த ஐபிஎல் தொடரில் சாதிப்பாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
