பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாகக் கட்சிக்கு உரிமை கோரி இரு தரப்பும் தொடர்ந்து போராடி வந்தன. இந்நிலையில் ஆவணங்களின் அடிப்படையில் பாமகவின் மாம்பழம் சின்னம் மற்றும் கொடி அன்புமணி தரப்புக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கானது இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது யார் என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி சின்னம் தொடர்பான இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒரு நட்பு ரீதியிலான ஆட்டத்தை ஆடுவதாகக் கடுமையான கருத்தைப் பதிவு செய்தார்.
இதற்குப் பதிலளித்த அன்புமணி தரப்பு வழக்கறிஞர்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகே தேர்தல் ஆணையம் தங்களுக்குச் சின்னத்தை ஒதுக்கியதாகத் தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி இது குறித்து அதிரடியான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
அதன்படி சின்னம் தொடர்பான விவகாரத்தில் இரண்டு நாட்களுக்குள் உரிய சிவில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவின் மீது மூன்று நாட்களுக்குள் உரிமையியல் நீதிமன்றம் விசாரணை நடத்தித் தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் ஆணையிட்டுள்ளார்.
தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான இந்தச் சின்னம் தொடர்பான சட்டப் போராட்டம் தற்போது நீதிமன்ற உத்தரவால் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
