முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் போற்றும் வகையில் மிகச்சிறப்பான ஆட்சியை நடத்தியுள்ளதாகப் பாராட்டினார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் போட்டியிட எந்தக் கட்சிக்கும் தகுதி இல்லை என்றும், மீண்டும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அண்ணா தொடங்கிய திமுகவில் இணைந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது அதிமுக என்ற இயக்கமே இல்லாத சூழல் நிலவுவதாகக் கூறினார்.
எடப்பாடி பழனிசாமியை ஒரு சுயநலவாதி என்று விமர்சித்த ஓபிஎஸ், தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் பண்பு அவரிடம் இல்லை என்றும், அதிமுகவை அவர் எங்கு அடகு வைத்துள்ளார் என்பது மக்களுக்குத் தெரியும் என்றும் சாடினார். இதற்கு மக்கள் தேர்தல் மூலம் தகுந்த தீர்ப்பு அளிப்பார்கள் என்று அவர் எச்சரித்தார்.
தான் திமுகவில் ஒரு சாதாரண தொண்டராகவே இணைந்துள்ளதாகவும், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இடும் உத்தரவின்படி தனது அடுத்தகட்ட செயல்பாடுகள் அமையும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
