தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை இரவு சுமார் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், அதிமுக – பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக அமித் ஷாவைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமி நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது, கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உள்ள இழுபறியைக் காட்டுவதாக அமைந்தது. பாஜக 30 தொகுதிகளைக் கேட்பதாகவும், ஆனால் அதிமுக தரப்பில் அதிக இடங்களை இரட்டை இலை சின்னத்திலேயே ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் இன்று டெல்லி செல்ல உள்ளனர்.
இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவில் என்.டி.ஏ கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
