புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையேயான கூட்டணியில் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையிலான லட்சிய ஜனநாயகக் கட்சியை கூட்டணியில் சேர்ப்பதற்கு பா.ஜ.க விருப்பம் தெரிவித்தது.

மேலும் இதற்கு முதல்வர் ரங்கசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, சமீபத்தில் பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர்களுடன் நடக்கவிருந்த ஆலோசனைக் கூட்டங்களையும் தவிர்த்துள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளில் பா.ஜ.க உறுதி அளிக்க வேண்டும் என்பதில் ரங்கசாமி பிடிவாதமாக இருப்பதே இந்த விரிசலுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

இந்தச் சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் ரங்கசாமி கூட்டணி அமைக்கக்கூடும் என்ற ஊகங்கள் பரவலாக எழுந்தன. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ரங்கசாமி, தற்போது தாங்கள் பா.ஜ.க கூட்டணியிலேயே நீடிப்பதாகவும், கூட்டணி குறித்து த.வெ.க-விடம் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

இருப்பினும், பா.ஜ.க-வுடனான தொகுதிப் பங்கீட்டில் சுமுக முடிவு எட்டப்படாவிட்டால், வரும் தேர்தலில் ரங்கசாமி தனித்துப் போட்டியிடவோ அல்லது த.வெ.க போன்ற புதிய கட்சிகளுடன் கைகோர்க்கவோ வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.