தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியைத் தொடர்ந்து தற்போது அதிமுகவும் தனது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசுகிறார்.

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் நிலவி வந்த இழுபறியைத் தீர்க்க இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸை விட ஒரு தொகுதி அதிகமாக, அதாவது 29 தொகுதிகளைப் பெற பாஜக விரும்புவதாகவும், சில குறிப்பிட்ட தொகுதிகளைக் கேட்டு அதிமுகவிடம் பிடிவாதம் காட்டுவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இன்று டெல்லி செல்ல உள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுகவுக்கு 10 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆனால், அதிமுக தரப்பில் 6 இடங்கள் மட்டுமே தர முன்வந்துள்ள நிலையில், அமித் ஷாவுடனான சந்திப்பிற்குப் பிறகு அமமுகவுக்கான இறுதித் தொகுதிகள் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெல்லி பயணங்களின் மூலம் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அடுத்த சில நாட்களில் ஒரு முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.