தமிழக அரசியல் களத்தில் தற்போது சென்னை பெரம்பூர் தொகுதி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரை எதிர்கொள்ள தி.மு.க. தரப்பில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா போன்ற நட்சத்திர வேட்பாளர்களைக் களமிறக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.
கடந்த தேர்தலில் சுமார் 54,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெரம்பூர் தொகுதியைத் தனது கோட்டையாகக் கருதும் தி.மு.க., விஜய்யின் வருகையைச் சமாளிக்க இப்போதே தீவிர வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளது.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் நிறைந்த இந்தத் தொகுதியில், அனுபவம் வாய்ந்த தி.மு.க.-வுக்கும் புதிதாகக் களம் காணும் விஜய்க்கும் இடையே ஒரு பலப்பரீட்சையே நடக்கும் என்பதால் அரசியல் சலசலப்பு அதிகரித்துள்ளது.
