தமிழக அரசியல் களத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, ஆளுங்கட்சியான திமுக-வின் முக்கிய கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) விசிக இணைய வாய்ப்புள்ளதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், விசிக தரப்பில் எதிர்பார்க்கப்படும் தொகுதிகள் மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து இன்னும் தெளிவான முடிவு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே ஒருவித ‘இழுபறி’ நிலை நீடித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், விசிக மாணவரணி துணைச் செயலாளர் நேப்போலியன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

“விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்கு வந்தால், அக்கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு ‘துணை முதல்வர்’ பதவி வழங்கப்படும் என விஜய் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.”

இந்தத் தகவல் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்ற கோரிக்கையை விசிக முன்வைத்து வரும் நிலையில், விஜய்யின் இந்தத் தூண்டில் விசிக-வை ஈர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய்யின் தவெக கட்சி, “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” எனும் முழக்கத்தை முன்னிறுத்தியே தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளது. இது ஆரம்பத்திலிருந்தே விசிக-வை குறிவைத்தே வீசப்பட்ட வலை என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போதைய நேப்போலியனின் பேட்டி, விசிக மற்றும் தவெக இடையே ஒரு ரகசிய அரசியல் உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதையே காட்டுவதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.