சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் மாதாந்திரப் படிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழக அரசியலில் தொடர்ந்து பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், த.வெ.க எம்.எல்.ஏ சபரி அய்யங்கரனின் சமீபத்திய சட்டப்பேரவைப் பேச்சும், தற்போது வெளிவந்திருக்கும் அவரது தேர்தல் வாக்குமூலத்  தகவல்களும் புதிய விவாதப் பொருளாகியுள்ளன.

சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய த.வெ.க எம்.எல்.ஏ சபரி அய்யங்கரன், தான் ஒவ்வொரு முறையும் ரயிலில் பயணம் செய்து, அதன்பிறகு ஆட்டோ பிடித்துத் தான் சட்டமன்றத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும், காவலர்களிடம் தனது அடையாள அட்டையைக் காட்டினாலும் தன்னை எம்.எல்.ஏ என்று எளிதில் நம்ப மாட்டார்கள் என்றும் உருக்கமாகத் தெரிவித்திருந்தார். மேலும், தனது கடந்த காலக் காதல் தோல்வி மற்றும் வேலையின்மை போன்ற சிரமங்களைக் கடந்து தனக்குச் சட்டமன்ற உறுப்பினராகவும், கார் வழங்கும் திட்டத்தின் மூலமாகவும் வாழ்வளித்த முதல்வர் விஜய்க்குத் தனது மனமார்ந்த நன்றிகளையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். அவரது இந்தக் பேச்சு அவையில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

 

இந்தச் சூழலில், அவர் சட்டமன்றத்தில் தெரிவித்த தகவலுக்கும், அவர் தாக்கல் செய்த தேர்தல் வேட்புமனுவின் விவரங்களுக்கும் முரண்பாடுகள் இருப்பதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது தேர்தல் வாக்குமூலத் தகவல்களின்படி, அவரிடம் நிலையான வைப்புத் தொகையாக 30 லட்சம் ரூபாய் இருப்பதோடு, சொந்தமாக ஒரு ‘Tigor’ காரும் இருப்பது பதிவாகியுள்ளது.

தான் ரயிலிலும் ஆட்டோவிலும் வருவதாக அவர் குறிப்பிட்ட நிலையில், ஏற்கனவே வாகன வசதி மற்றும் குறிப்பிட்ட சேமிப்பு விவரங்கள் தேர்தல் ஆவணங்களில் உள்ளதைச் சுட்டிக்காட்டி பலரும் சமூக வலைதளங்களில் இது குறித்து விவாதித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களின் பொதுப்பேச்சுகளுக்கும், அவர்களின் சொத்து விவரங்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் குறித்த இந்த விவகாரம் தற்போது இணையத்தில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.