தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, சட்டமன்ற உறுப்பினர்களின் பணித்திறனை மேம்படுத்தும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் அறிவித்தார். இதன்படி, அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் அரசு சார்பில் புதிய கார் வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு உதவியாக ஒரு அலுவலக உதவியாளர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர்களின் அலுவலகச் செலவினங்களுக்காக மாதம் ₹75,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு  உறுப்பினர்களும் பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

இந்த அறிவிப்பின் போது சட்டப்பேரவையில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) எம்.எல்.ஏ சண்முகம், அரசு வழங்கும் கார் ‘டொயோட்டா இன்னோவா’ (Toyota Innova) மாடலாக இருந்தால் மிகவும் பயனுள்ளதாகவும் வசதியாகவும் இருக்கும் என்று சுவாரசியமான கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். இக்க கோரிக்கையைக் கேட்ட முதலமைச்சர் மற்றும் சக சட்டமன்ற உறுப்பினர்கள் புன்னகையுடன் அதனை எதிர்கொண்டனர்.

 

இந்நிலையில், இன்னோவா கார் கேட்ட த.வெ.க எம்.எல்.ஏ சண்முகத்தின் தேர்தல் வேட்புமனு தாக்கல் குறித்த விவரங்கள் வெளியாகி பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர் சமர்ப்பித்த சொத்து விவரப் பட்டியலின்படி, அவரிடம் ஏற்கனவே ஆடம்பர சொகுசு கார்கள் பல இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, இரண்டு மெர்சிடீஸ் பென்ஸ்கார்கள், ஒரு டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா மற்றும் ஒரு வோக்ஸ்வேகன் ஏமியோ ஆகிய 4 நான்கு சக்கர வாகனங்கள் அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சொந்தமாக இரு பென்ஸ் கார்கள் மற்றும் ஒரு இன்னோவா கார் வைத்திருக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினர், சட்டப்பேரவையில் அரசு வழங்கும் கார் ‘இன்னோவா’வாக இருக்க வேண்டும் என்று கேட்ட நிகழ்வு தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாகவும் சுவாரசியமான செய்தியாகவும் உலா வந்து கொண்டிருக்கிறது.