சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் மாதாந்திரப் படிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்புக்குத் தவெக மற்றும் கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், ஏற்கனவே வசதிபடைத்த மற்றும் கார் வைத்துள்ள எம்.எல்.ஏக்களுக்கும் இது அவசியமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய திமுக மருத்துவரணிச் செயலாளர் எழிலன், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார். அப்போது அவர், “கஜானா காலியாக இருப்பதாகக் கூறிவிட்டு, தற்போது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்படும் என்று அறிவிக்கிறார்கள். அப்படியானால் திமுக ஆட்சியில் கஜானா காலியாக விட்டுச் செல்லப்பட்டதாகக் கூறப்படுவதில் என்ன நியாயம் உள்ளது?” என்ற கேள்வியை எழுப்பினார்.
மேலும் தனது யோசனையாக, தேர்தல் வேட்புமனுவில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவரங்களின்படி ஏற்கனவே கார் வைத்துள்ள எம்.எல்.ஏக்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கார் வழங்கக் கூடாது என்றும், உண்மையில் கார் இல்லாத ஏனைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் வழங்குவதே சரியானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பட்ஜெட்டில் காப்பீடு தொகையாக 1400 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்ப காப்பீடு தொகை 5 லட்சத்திலிருந்து 25 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அப்படி எனில் நாம் காப்பீடு நிறுவனங்களுக்கு கொடுக்கப் போகும் தொகை 4000 கோடியா இது எப்படி சாத்தியமாகும் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழக வெற்றிக்கலக அரசின் கார் வழங்கும் திட்டத்திற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருவது குறிப்பிடத்தக்கது.
