மும்பையில் வெளிநாட்டு இன்ஃப்ளூயன்ஸர் ஒருவர் மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவருக்குப் பணம் அளித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், அந்த இடத்திற்கு வந்த மற்றொரு பெண்ணுக்கும் இன்ஃப்ளூயன்ஸாவிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் இந்தச் சம்பவத்தைத் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாற்றி உள்ளது.

‘Cris Travelss’ என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்துள்ள இந்தக் காணொளியில், மும்பை வீதியில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவருக்கு இன்ஃப்ளூயன்ஸர்  100 ரூபாய் பணம் வழங்குவது பதிவாகியுள்ளது. அப்போது அங்கு வந்த பெண் ஒருவர், தனக்கும் மருத்துவச் செலவுக்கும் உணவிற்கும் உதவி தேவைப்படுவதாகக் கூறி அதைக் கண்டித்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by CRIS TRAVELS (@cristravelss)

இதனைத் தொடர்ந்து அந்த இன்ஃப்ளூயன்ஸா முதியவரிடம் பேசி அவரது உடல்நிலை பற்றிக் கேட்டுள்ளார். தனக்குப் போலியோ தாக்கியுள்ளதாகவும், நடமாட சிரமம் இருப்பதாகவும் அந்த முதியவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்தப் பெண்ணோ, அந்த நபர் வழக்கமாகப் பிச்சை எடுப்பவர் என்றும், அவர் தினமும் நன்கொடைகள் மூலமாக சுமார் 2,000 ரூபாய் வரை சம்பாதிப்பார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையிலும், இன்ஃப்ளூயன்ஸர் தனது முடிவில் உறுதியாக நின்று முதியவரை ஆதரித்துப் பேசியுள்ளார். அந்த முதியவரின் உடல்நிலையைக் சுட்டிக்காட்டிய அவர், அந்தப் பெண்ணுக்கும் அதே போன்ற நிலைமை இருந்தால் தானும் உதவியிருப்பேன் என்று வாதிட்டுள்ளார். மேலும், முதியவருக்கு கூடுதலாக மற்றொரு 100 ரூபாயைக் கொடுத்து, மொத்தமாக 200 ரூபாயை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

மும்பையில் தான் மனிதாபிமான அடிப்படையில் அந்த முதியவருக்கு உதவியதாகவும், இதுபோன்ற சூழ்நிலையில் பார்வையாளர்கள் என்ன செய்திருப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பி அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் இந்தச் சம்பவம் குறித்துத் தீவிரமாக விவாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.