அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றது முதல் அந்நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்றப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். விசா நடைமுறைகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் முறையான ஆவணங்கள் இன்றித் தங்கியிருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களின் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவில் முறைகேடாக நுழைந்து வசித்து வரும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரைத் தானாகவே முன்வந்து வெளியேறுமாறு அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி அமெரிக்காவில் ஆவணங்களின்றித் தங்கியிருக்கும் இந்தியா கொலம்பியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாங்களாகவே நாட்டை விட்டு வெளியேறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியேறுபவர்களுக்குத் தேவையான விமான டிக்கெட்டுகளை அமெரிக்க அரசே வழங்குவதுடன் வெளியேறும் ஊக்கத்தொகையாக 2600 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சத்து 40000 ரூபாய் வரை இந்தத் தொகை கிடைக்கும் என்பதால் அங்கீகரிக்கப்பட்ட கைபேசி செயலி மூலம் பதிவு செய்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் இந்த அதிரடித் திட்டம் வெளிநாட்டினர் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
