”இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் மூளும் அபாயம் இன்னும் குறையவில்லை” என அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியது. அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாகத் தலையிட்டதால் மட்டுமே ஒரு மிகப்பெரிய அணு ஆயுத மோதல் தவிர்க்கப்பட்டதாக அந்த அறிக்கை பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், இந்த அமைதி தற்காலிகமானதுதான் என எச்சரித்துள்ள அமெரிக்கா, எல்லை தாண்டிய பயங்கரவாத அமைப்புகள் மீண்டும் ஒரு போரைத் தூண்டும் ‘கேட்டலிஸ்ட்’ (Catalyst) போலச் செயல்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் நேரடிப் போரைத் தவிர்க்க விரும்பினாலும், திடீரென நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்கள் நிலைமையைச் சரிசெய்ய முடியாத அளவிற்கு அணு ஆயுத மோதலாக மாற்றக்கூடும் என உளவுத்துறைத் தலைவர் துளசி கப்பார்ட் சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
