தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை அதிமுக – பாஜக கூட்டணியில் இணைக்கத் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ரஜினிகாந்த் குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துகளால் பாஜகவிற்கும் விஜய்க்கும் இடையே மோதல் போக்கு உருவானது.
இதனால் விஜய் என்டிஏ கூட்டணிக்கு வரமாட்டார் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது அதிமுகவின் மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி திரைமறைவில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்க்கு 80 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி வரை ஆஃபர் கொடுக்கப்பட்டாலும், தனது முதல்வர் கனவு மற்றும் கொள்கை முடிவுகளால் அவர் தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
அதிமுக முன்னாள் நிர்வாகி கே.சி. பழனிசாமி இது குறித்துக் கூறுகையில், கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் திமுகவை வீழ்த்தவும் விஜய்யின் வருகை அவசியம் என வேலுமணி கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுக சுமார் 150 இடங்களில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதால், விஜய் கூட்டணிக்கு வந்தால் அவருக்கு 45 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், அதன் மூலம் அவர் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட வர முடியும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இருப்பினும், விஜய்யின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்தே தமிழகத்தின் தேர்தல் கூட்டணி சமன்பாடுகள் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
