மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார்.

உடனடி போர் நிறுத்தம் அவசியம் என்று வலியுறுத்திய அவர், ஐரோப்பா அல்லது இந்தியாவால் இந்த விவகாரத்தில் சமரசம் செய்ய முடியுமா என்பது குறித்து ஆராய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஏற்கனவே ஈரானின் வெளியுறவு அமைச்சருடன் தொடர்ந்து பேசி வருவதையும், அமைதிக்கான முயற்சிகளை இந்தியா முன்னெடுத்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரத்தில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் தேவைகள் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பேசி, பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச விதிகளைப் பல நாடுகள் மீறி வரும் சூழலில், இந்தியா போன்ற வலுவான நாடுகளின் தலையீடு உலகளாவிய ஒழுங்கை மீண்டும் நிலைநிறுத்த உதவும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதே வேளையில், வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.