சேலத்தில் 65 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் புகுந்த மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கோரிமேடு பகுதியில் வசித்து வரும் அந்த மூதாட்டி, சனிக்கிழமை இரவு தனது வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் கத்தியுடன் வந்த இருவர், மூதாட்டியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் காயமடைந்த மூதாட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதோடு, இக்கொடூரச் சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கண்ணங்குறிச்சி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், கோரிமேடு ஜல்லிக்காடு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞரான ரவிக்குமார் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் மது போதையில் இருந்த இளைஞர்கள் இந்த அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தற்போது இந்த வழக்கு அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.