தைவான் நாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் தனது மனை மீது சந்தேகப்பட்டு நடத்திய வித்தியாசமான  வேலை தற்போது உலக அளவில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. தன் மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட அந்த நபர், தன் வீட்டில் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ரோபோடிக் வேக்யூம் கிளீனரைத் தனது அலுவலகத்தில் இருந்தபடியே இயக்கத் தொடங்கியுள்ளார். அந்த ரோபோவில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் தனது மனைவியின் கள்ளத்தொடர்பை கையும் களவுமாகப் படம் பிடித்த அவர், அதனை முக்கிய ஆதாரமாகக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனைவி கள்ளத்தொடர்பில் ஈடுபட்டது உறுதியானதால் கணவனுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கும்படி அந்தப் பெண்ணுக்கு உத்தரவிட்டது. இருப்பினும், இந்த விவகாரம் இதோடு முடிவடையவில்லை; தன் அனுமதியின்றி தனது அந்தரங்கத்தை ரகசியமாகப் படம் பிடித்தது தவறு என்று கூறி, அந்த மனைவியும் தன் கணவருக்கு எதிராக மற்றொரு வழக்குத் தொடர்ந்தார். இந்த இரண்டாவது வழக்கினை விசாரித்த நீதிமன்றம், கணவன் செய்த செயலும் சட்டப்படி தவறுதான் என்று தீர்ப்பளித்தது.

இதன் காரணமாக, மனைவியின் கள்ளக்காதலை அம்பலப்படுத்தியதற்காக அந்த நபருக்கு நீதிமன்றம் ரூ.4.5 லட்சம் அபராதம் விதித்து அதிரடி காட்டியுள்ளது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனைவியின் ரகசியத்தைக் கண்டுபிடித்த கணவனுக்கு இழப்பீடு கிடைத்தாலும், அந்தரங்க உரிமையை மீறியதற்காக அவரே அபராதம் கட்டிய இந்த விசித்திரமான தீர்ப்பு தற்போது சமூக வலைதளங்களில் பலரால் ஆச்சரியத்துடன் பகிரப்பட்டு வருகிறது.