நெல்லை மாவட்டம் மானூர் அருகே 5-ஆம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாவடி பகுதியைச் சேர்ந்த கொத்தனார் ஒருவரைப் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே மாவடி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (36). கொத்தனாராக வேலை செய்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அந்தச் சிறுமி, பள்ளியில் தனது ஆசிரியையிடம் நடந்தவற்றைக் கூறி அழுதுள்ளார்.
மாணவியின் புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, உடனடியாக மாவட்டக் குழந்தைகள் நல அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அதில் முருகன் அந்தச் சிறுமிக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் நலத் துறையினர் நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு, முருகன் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த முருகனைத் தேடி வந்த தனிப்படை போலீஸார், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பள்ளி ஆசிரியையின் துரிதமான மற்றும் விழிப்புணர்வு கலந்த நடவடிக்கையால் குற்றவாளி உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
