திருநெல்வேலியில் சமூக வலைதள செயலி மூலம் தனியார் நிறுவன மேலாளரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து, மிரட்டி நகை மற்றும் பணத்தைப் பறித்த இரு இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் சென்னையில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.

மேலும் விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்கு வந்திருந்த இவரை, மர்ம நபர் ஒருவர் மொபைல் செயலி மூலம் தொடர்பு கொண்டு ஓரினச்சேர்க்கைக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனை நம்பிச் சென்ற வெங்கடாசலத்தை, அந்த நபர் தனது இருசக்கர வாகனத்தில் ஆள்நடமாட்டமில்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதுடன், இடையில் மற்றொரு வாலிபரையும் உடன் சேர்த்துக் கொண்டுள்ளார்.

இதனால் காட்டுப்பகுதிக்குச் சென்றதும் அந்த இரு இளைஞர்களும் வெங்கடாசலத்தை மிரட்டி, அவரிடமிருந்த 5 கிராம் தங்க மோதிரத்தைப் பறித்தனர். மேலும், வலுக்கட்டாயமாக கூகுள் பே செயலி மூலம் 20 ஆயிரம் ரூபாயையும், அவரது செல்போனையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மேலாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் பேட்டை பகுதியைச் சேர்ந்த சக்திசுரேஷ் மற்றும் இசக்கிராஜா என்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.