தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில், மது குடிக்கப் பணம் கேட்டுத் தகராறு செய்த மகனை, கிரைண்டர் குழவிக்கல்லால் அடித்துக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டயபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தொழிலாளி பாலச்சந்திரன். இவருடைய மகன் கனகராஜ் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.
மேலும் சம்பவத்தன்று கனகராஜ் தனது மோட்டார் சைக்கிளைப் பழுது பார்ப்பதற்கும், மது குடிப்பதற்கும் தந்தையிடம் பணம் கேட்டுத் தகராறு செய்துள்ளார். பாலச்சந்திரன் பணம் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, மோதலாக மாறியுள்ளது.
இந்த மோதலின் போது ஆத்திரமடைந்த பாலச்சந்திரன், அருகில் இருந்த கம்பால் கனகராஜைத் தாக்கியதுடன், வீட்டில் இருந்த கிரைண்டர் குழவிக்கல்லை எடுத்து அவர் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கனகராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார், கனகராஜின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தந்தை பாலச்சந்திரனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையால் ஏற்பட்ட தகராறில் மகனைத் தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
