அமெரிக்காவில் இயங்கி வரும் ‘பெட்டர் ஹோம் அண்ட் ஃபைனான்ஸ்’ என்ற பிரபல டிஜிட்டல் அடமான நிறுவனத்தின் நிறுவனரான விஷால் கார்க், கடந்த 2021-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்குச் சில நாட்களுக்கு முன்பாக, ஒரே ஒரு 3 நிமிட ஜூம் வீடியோ அழைப்பில் சுமார் 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து உலகளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியவர்.

இந்தியாவில் பிறந்து நியூயார்க்கில் வளர்ந்த இந்த இந்திய-அமெரிக்க தொழில்முனைவோர், நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களைக் கொடூரமாக நடத்தியதற்காகவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத கடுமையான அணுகுமுறைக்காகவும் சர்வதேச அளவில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இந்நிலையில் அந்த அதிர்ச்சிச் சம்பவத்திற்குப் பிறகு, விஷால் கார்க் நிர்வாகத்தின் அழுத்தத்தால் சில காலம் விடுப்பில் சென்று மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றபோதிலும், நிறுவனத்தின் வீழ்ச்சி தொடரவே செய்தது.

தொற்றுநோய்க் காலத்தில் 8 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் உச்சத்தில் இருந்த இந்நிறுவனம், வட்டி விகிதங்களின் உயர்வால் அடமானச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக 1.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்பைச் சந்தித்தது.

இதனால் நிறுவனத்தின் பங்குகள் 90 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்து சந்தை மதிப்பு பல மடங்கு வீழ்ச்சியடைந்தது. தொடர்ச்சியான நிதி இழப்புகள், நிறுவனத்தின் வீழ்ச்சி மற்றும் விஷால் கார்க்கின் தன்னிச்சையான நடத்தை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நிறுவனத்தின் இயக்குநர்கள் வாரியம் அவரை சி.இ.ஓ பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.

மேலும் வாரியத்தில் புதிதாக இணைந்த டேனியல் லூயிஸ் என்பவர் புதிய இடைக்கால தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், விஷால் கார்க் தான் ஏமாற்றப்பட்டுப் பதவியில் இருந்து தூக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.

இதனால் இரக்கமற்ற முறையில் 900 பேரின் வேலையைப் பறித்த அதே சி.இ.ஓ, இன்று தனது சொந்த நிறுவனத்திலேயே பழிவாங்கப்பட்டுப் பதவியை இழந்து நிற்கும் நிகழ்வு கார்ப்பரேட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.