ஈரான்-இஸ்ரேல் போரின் பாதிப்புகள் தற்போது மக்களின் ஆரோக்கியத்திலும் சுற்றுச்சூழலிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த மார்ச் 8-ம் தேதி தெஹ்ரான் அருகே உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட கரும்புகை, மழை மேகங்களுடன் கலந்து ‘கருப்பு மழையாக’ பெய்துள்ளது.
இது 35 ஆண்டுகளுக்கு முன்பு வளைகுடாப் போரின்போது குவைத்தில் எண்ணெய் கிணறுகள் எரிக்கப்பட்ட சம்பவத்தை நினைவூட்டுவதாக நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த நச்சுப் புகையில் உள்ள ஹைட்ரோகார்பன்கள் மற்றும் சல்பர் டை ஆக்சைடு போன்ற ஆபத்தான வேதிப்பொருட்கள், காற்று மற்றும் குடிநீரை மாசுபடுத்தி மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
இந்த நச்சு மாசுபாடு காரணமாக சுவாச நோய்கள், தோல் எரிச்சல் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. குறிப்பாக தெஹ்ரான் நகரம் மலைகளால் சூழப்பட்டிருப்பதால், மாசுபட்ட காற்று வெளியேற முடியாமல் அங்கேயே தங்கி பாதிப்பை அதிகமாக்குகிறது.
ஏவுகணைகள் மற்றும் குண்டுகளில் உள்ள கன உலோகங்கள் மண்ணிலும் நீரிலும் கலந்து பல தசாப்தங்களாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இவற்றைச் சுத்தப்படுத்துவது மிகவும் கடினம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
