பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சாம்பியன்ஸ் டிராபி நாயகனுமான சர்பராஸ் அகமது (38), சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் தனது ஓய்வை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சுமார் இரண்டு தசாப்தங்களாக நீடித்த தனது கிரிக்கெட் பயணத்திற்கு அவர் இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமது ஓய்வு குறித்து உருக்கமாகப் பேசிய சர்பராஸ் அகமது, “பாகிஸ்தான் நாட்டுக்காக விளையாடியதை எனது வாழ்வின் மிகப்பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். 2006-இல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றது முதல், 2017-இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது வரை, பாகிஸ்தான் சீருடையில் நான் கழித்த ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது. எனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களின் பேராதரவிற்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.
சர்பராஸ் அகமதுவின் தலைமையில் பாகிஸ்தான் அணி டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்ததுடன், தொடர்ந்து 11 தொடர்களை வென்று உலக சாதனை படைத்தது. மேலும், இவரது தலைமையில்தான் பாபர் அசாம், ஷாஹீன் அப்ரிடி, ஷதாப் கான் போன்ற இன்றைய நட்சத்திர வீரர்கள் சர்வதேச அரங்கில் ஜொலிக்கத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2007-ஆம் ஆண்டு அறிமுகமான சர்பராஸ், பாகிஸ்தான் அணிக்காக ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. இவர் 54 டெஸ்ட், 117 ஒருநாள் போட்டிகள், 61 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 6,164 ரன்கள் (6 சதங்கள், 35 அரைசதங்கள் இதில் அடங்கும்). விக்கெட் கீப்பிங் பொறுத்தவரை 315 கேட்ச்கள், 56 ஸ்டம்பிங்குகள்.
அதனப்பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் சதமடித்த ஒரே பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் இவராவார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 கேட்ச்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். சர்பராஸ் அகமது கடைசியாக 2023 டிசம்பரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். தற்போது விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தேர்வுக் குழு உறுப்பினராகவும், பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் தனது அடுத்த இன்னிங்ஸைத் தொடர்ந்து வருகிறார்.
