நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் (2026) பாகிஸ்தான் அணி சந்தித்த படுதோல்விகள் உலகளவில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில், இந்திய அணியின் அபார வெற்றியையும் பாகிஸ்தான் அணியின் மோசமான நிலையையும் ஒப்பிட்டு அந்நாட்டின் முன்னாள் கேப்டன் ராஷித் லத்தீஃப் கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்தத் தொடரின் முதல் சுற்றில் அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகளுக்கு எதிராகப் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும், இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

தொடர்ந்து நடைபெற்ற சூப்பர்-8 சுற்றில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இலங்கைக்கு எதிராக 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்ற போதிலும், பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது. இதனால் அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

மறுபுறம், இந்திய அணி விளையாடிய 9 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், டாஸ் தோற்ற போதிலும் இந்திய அணி 255 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. பின்னர் நியூசிலாந்து அணியை 159 ரன்களில் சுருட்டி, 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் இந்தச் சரிவு குறித்து ராஷித் லத்தீஃப் கூறுகையில், இந்திய அணி கோப்பைகளை வெல்வதைத் தனது வழக்கமாக மாற்றிக்கொண்டுள்ளது. இது ஒரே இரவில் நடந்ததல்ல; கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் செய்த கடின உழைப்பிற்கு கிடைத்த பலன். ஐசிசி தொடர்களாக இருக்கட்டும் அல்லது ஆசியக் கோப்பையாக இருக்கட்டும், இந்தியாவின் டிஎன்ஏ-விலேயே கோப்பைகளை வெல்வது கலந்திருக்கிறது. ஆனால், நமது (பாகிஸ்தான்) டிஎன்ஏ-வில் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னதாகவே தோற்று வெளியேறுவதுதான் உள்ளது.

வீரர்களின் ஒப்பந்த முறைகேடுகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும் (PCB) அவர் சாடியுள்ளார். “பலவீனமான நிர்வாகமே இதுபோன்ற தவறுகளைச் செய்யும். வீரர்களுடன் ஒப்பந்தம் செய்யும் போதே தண்டனைகள் மற்றும் ஊக்கத்தொகை குறித்த தெளிவான விதிகள் இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தான் அணியின் இந்த மோசமான செயல்பாடு குறித்து அந்நாட்டு முன்னாள் வீரர்கள் பலரும் தற்போது சமூக வலைதளங்களில் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்