சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் சொதப்பலான ஆட்டத்தைத் தொடர்ந்து, தற்போது அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கும் (PCB) வீரர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. குறிப்பாக, நட்சத்திர வீரர் பாபர் அசாமின் காயம் குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் எழுப்பியுள்ள கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இந்நிலையில், அணியின் முக்கிய வீரர்களான பாபர் அசாம் மற்றும் ஃபக்கர் ஜமான் ஆகியோரின் உடல்தகுதி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் போது இவர்களுக்கு காயம் இருந்தது ஏன் முன்னரே தெரிவிக்கப்படவில்லை? என்பது குறித்து மிஸ்பா-உல்-ஹக், சர்பராஸ் அகமது மற்றும் ஆசாத் ஷபிக் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள முன்னாள் வீரர் முகமது அமீர், பிசிபி நிர்வாகத்தின் மீது அடுக்கடுக்கான புகார்களை வைத்துள்ளார். அவர் கூறியதாவது, “ஃபக்கர் ஜமான் தனது காயத்தை மறைப்பதாகக் கூறுவது தவறு. அவருக்குத் தசைநார் பாதிப்பு இருப்பது உண்மைதான். ஆனால், வாரியம் ஒரு வீரரின் காயத்தைப் போலியாகக் ஜோடித்துக் கதையளப்பதாக நான் கேள்விப்படுகிறேன். அது ஃபக்கர் ஜமான் கிடையாது.
அமீர் நேரடியாகப் பெயரைச் சொல்லாவிட்டாலும், வங்கதேசத் தொடரில் இருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டதை மறைக்கவே, அவருக்குக் காயம் இருப்பதாக வாரியம் நாடகமாடுகிறது என்பதை அவர் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்துப் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஆகிப் ஜாவேத், “உலகக்கோப்பை முடிந்த பிறகே இந்த வீரர்கள் தகுதியற்ற நிலையில் இருப்பது எங்களுக்குத் தெரிய வந்தது. ஒரு தொடருக்குச் செல்லும் போது வீரர்களின் உடல்நிலை குறித்து பயிற்சியாளரும், பிசியோவும் உடனுக்குடன் அப்டேட் தர வேண்டும். ஆனால், இங்கே தகவல் பரிமாற்றத்தில் பெரிய ஓட்டை உள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “பாகிஸ்தான் ஒருவேளை அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தால், இவர்கள் திடீரெனத் தகுதியைப் பெற்றிருப்பார்களா?” என்றும் அவர் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். பாபர் அசாம் வங்கதேசத் தொடரில் இருந்து நீக்கப்பட்டாரா அல்லது உண்மையில் காயம் காரணமாக விலகினாரா? உலகக்கோப்பை தோல்வியை மறைக்க வீரர்களின் உடல்தகுதி மீது வாரியம் பழி போடுகிறதா?
ஏற்கனவே 2022-க்குப் பிறகு ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், இந்த ‘பிட்னஸ்’ சர்ச்சை அந்நாட்டு கிரிக்கெட்டில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
