2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறிய நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வீழ்ச்சியடைந்துவிட்டதாக எழுந்துள்ள விமர்சனங்களை அந்நாட்டு பயிற்சியாளர் ஆக்கிப் ஜாவேத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தொடர்ச்சியாக நான்கு ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணி சோபிக்கத் தவறியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,

“பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒரு தோல்வி ஏற்பட்டால் உடனே யாரையாவது தண்டிக்கும் கலாச்சாரம் உள்ளது. ஆசியக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என ஒவ்வொரு முறை தோற்கும் போதும் பயிற்சியாளரையோ, தேர்வுக்குழுவையோ மாற்ற வேண்டும் என கூக்குரல் எழுகிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் அடிக்கடி பயிற்சியாளர்களை மாற்றுவது சரியான அணுகுமுறை அல்ல. தோல்விக்கு யாரையாவது பலி ஆடாக்குவதை நாம் நிறுத்த வேண்டும்.

கடந்த 18 மாதங்களில் பாகிஸ்தான் அணி படைத்த வெற்றிகளை அவர் சுட்டிக்காட்டினார். அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி. 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றது. தென்னாப்பிரிக்க மண்ணில் அந்த அணியை 3-0 என வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

“சாம்பியன்ஸ் டிராபி தோல்வி மிகப்பெரிய ஏமாற்றம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதற்கு முன்பு வரை அணியின் செயல்பாடு சிறப்பாகவே இருந்தது” என்று அவர் குறிப்பிட்டார்.

உலகக்கோப்பையில் இந்தியாவிடம் தோற்றது குறித்து பேசிய அவர், “1975-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் சிறந்த கேப்டன்கள் தலைமையிலான அணிகள் கூட உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியதில்லை. இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை சாதனை 8-0 (டி20-யில் 8-1) என்றே உள்ளது. எனவே, இந்தியாவிடம் தோற்றதை மட்டும் வைத்து கிரிக்கெட் அழிந்துவிட்டதாகக் கூற முடியாது” என்றார்.

மேலும், நடப்பு டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்திடம் மட்டுமே தோற்றதாகவும், நிகர ரன் ரேட் (NRR) அடிப்படையில் தான் அரையிறுதி வாய்ப்பை இழந்ததாகவும், இது ஒரு பெரிய சரிவு அல்ல என்றும் அவர்வாதிட்டார்.