தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான தேவா மற்றும் ஜீவா ஆகிய சிறுவர்களை நேரில் அழைத்து பாராட்டினார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் நகைச்சுவையான மற்றும் சுவாரஸ்யமான காணொளிகளைப் பதிவிட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தச் சிறுவர்களின் திறமையை முதலமைச்சர் வெகுவாகப் பாராட்டினார்.
படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்கள்!
தேவா, ஜீவா உடன் உங்கள் ஸ்டாலின்.#VibeWithMKS pic.twitter.com/o0nDSkJYZL
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 14, 2026
அவர்களின் காணொளிகளைத் தான் விரும்பிப் பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர் சிறுவர்களின் படைப்பாற்றலை நேரில் பாராட்டி ஊக்கப்படுத்தினார். சிறுவர்களின் பொழுதுபோக்குத் திறனைப் பாராட்டிய அதே வேளையில் கல்வியின் அவசியத்தையும் முதலமைச்சர் அவர்களுக்கு எடுத்துரைத்தார். ரீல்ஸ் போடுவது ஒருபுறம் இருந்தாலும் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
நன்றாக ரீல்ஸ் போடுகிறீர்கள் அதேபோல நன்றாகப் படிக்கவும் வேண்டும் என்று அன்போடு அறிவுரை வழங்கிய முதலமைச்சர் கல்வியே மிக முக்கியம் என்பதைச் சிறுவர்களுக்கு வலியுறுத்தினார். முதலமைச்சரின் இந்தப் பாராட்டு மற்றும் அறிவுரை அந்தச் சிறுவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
