பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில், ஒரு போலி மருத்துவர் செய்த காரியம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. நரோ முரார் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு கடந்த மார்ச் 3-ம் தேதி விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்தில் துடித்த அந்த இளைஞர், சிகிச்சைக்காக அருகிலுள்ள ஒரு ‘போலி’ மருத்துவரிடம் சென்றுள்ளார். அங்கே அந்த மருத்துவர் செய்த செயல் தான் இப்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. காயத்திற்கு தையல் போட வேண்டிய அந்த மருத்துவர், சாதாரணமாக நாம் பேப்பர் அடிக்கப் பயன்படுத்தும் ‘ஸ்டெப்ளர்’ மெஷினை வைத்து அந்த இளைஞரின் தலையில் பின் அடித்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத அந்த இளைஞர் வலியால் துடித்த போதிலும், அந்த மருத்துவர் அசால்ட்டாக ஸ்டெப்ளர் அடித்துக் கொண்டே இருந்துள்ளார். அங்கிருந்த யாரோ ஒருவர் இந்த அராஜகத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, இப்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. “மக்களின் உயிரோடு விளையாடும் இப்படிப்பட்ட போலி மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மக்கள் கொந்தளித்து வருகின்றனர். முறையான மருத்துவ வசதி இல்லாத கிராமப்புறங்களில் இது போன்ற போலி மருத்துவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது, பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
