தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், மாவட்டச் செயலாளர்களுடன் நடத்திய ஆலோசனையில், வரும் தேர்தலில் கூட்டணி அமைப்பதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

பெரும்பாலான நிர்வாகிகள் கூட்டணி அமைக்கலாம் என்றும், ஆனால் கட்சிக்கு உரிய அங்கீகாரமும் அதிக தொகுதிகளும் கிடைக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம், தனித்து நின்றாலும் 234 தொகுதிகளிலும் கடுமையாக உழைக்கத் தயாராக இருக்குமாறு நிர்வாகிகளுக்கு ஆனந்த் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தவெக – அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு முக்கியப் பதில் அளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒத்த கருத்துடைய கட்சிகள் அதிமுகவின் தலைமையை ஏற்றுக்கொண்டு வந்தால், நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று கூறினார்.

யார் வேண்டுமானாலும் அதிமுக தலைமையின் கீழ் கூட்டணிக்கு வரலாம் என அவர் அழைப்பு விடுத்துள்ளதால், தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கணக்குகள் உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.