மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் மனிதநேயத்தைப் போற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நவ்ஷ்யா கணபதி சவுக் பகுதியில் காய்கறிகள் ஏற்றிச் சென்ற தள்ளுவண்டி ஒன்று, சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி எதிர்பாராதவிதமாக தலைகீழாகக் கவிழ்ந்தது. அந்த ஏழை வியாபாரியின் உழைப்பான உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் அனைத்தும் நடுரோட்டில் சிதறின.
வழக்கமாக இது போன்ற நேரங்களில் வாகன ஓட்டிகள் எரிச்சலில் ஹார்ன் அடிப்பதோ அல்லது ஒதுங்கிச் செல்வதோ வழக்கம். ஆனால், அங்கு நிலவிய காட்சி அப்படியே மாறாக இருந்தது. சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தும் கூட, யாரும் வண்டியை எடுக்காமல் அந்த வியாபாரிக்கு உதவ முன்வந்தனர்.
இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் முதல் பாதசாரிகள் வரை அனைவரும் உடனடியாக இறங்கி, சாலையில் சிதறிக் கிடந்த காய்கறிகளை ஒன்று சேர்த்து மீண்டும் வண்டியில் ஏற்றி வைத்தனர். இந்த நெகிழ்ச்சியான காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
“>
“சுயநலமான இந்த உலகில் மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதற்கு இதுவே சாட்சி” என்று பலரும் பாராட்டி வருகின்றனர். சில நிமிடங்களில் அந்நியர்கள் காட்டிய இந்த அன்பு, அந்த ஏழை வியாபாரியின் ஒருநாள் வருமானத்தையும் உழைப்பையும் காப்பாற்றியுள்ளது. இந்த வீடியோ லட்சக்கணக்கான இதயங்களை நெகிழ வைத்துள்ளது.
