திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் பிரியதர்ஷினி தம்பதியரின் 7 வயது மகன் சிவாதித்யா, தனது தாத்தாவுடன் காரில் சென்றபோது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கினார். கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதிய இந்த கோர விபத்தில் தாத்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சிறுவன் பலத்த காயங்களுடன் கோவை சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி சிறுவன் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தங்கள் மகனை இழந்து வாடிய நிலையிலும், மற்றவர்களின் உயிரைக் காக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர்.

தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியைப் பெற்று, சிறுவனின் கண்கள் தவிர இதயம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட 6 முக்கிய உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. இந்த உறுப்புகள் ஈரோடு மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. தனது 7 வயதிலேயே உடல் உறுப்பு தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ள அந்த சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.