மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர்.

சென்னையில் தியாகராயநகர், அண்ணாநகர், ராயப்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. அவசர தேவைகளுக்கும் அலுவலக பயணங்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் எரிபொருள் தொட்டியை முழுமையாக நிரப்பி வருவதுடன் குடிநீர் கேன் மற்றும் பாட்டில்களிலும் பெட்ரோலை வாங்கிச் செல்கின்றனர்.

இதனிடையே பாட்டில்கள் மற்றும் கேன்களில் பெட்ரோல் விநியோகம் செய்யக்கூடாது என பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் கடும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. பாதுகாப்பற்ற முறையில் பாட்டில்களில் பெட்ரோலை கொண்டு செல்வதால் பெரும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

வாகனங்களில் மட்டுமே நேரடியாக எரிபொருள் நிரப்ப வேண்டும் என்பதே சட்ட விதி என்று சுட்டிக்காட்டியுள்ள அந்நிறுவனம், விதிமுறைகளை மீறி பாதுகாப்பற்ற முறையில் பெட்ரோல் வழங்க வேண்டாம் என விற்பனை நிலையங்களை கேட்டுக்கொண்டுள்ளது. எரிபொருள் இருப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.