திரைத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட நடிகர் நாசர், சமீபகாலமாக சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் நடிகர்களின் போக்கை கடுமையாக விமரிசித்துள்ளார். “வெறுமனே பிரபலமாக இருந்தால் மட்டும் போதும் என்று நினைத்து பலரும் கட்சி ஆரம்பிக்கிறார்கள். ஆனால், சினிமா புகழை வைத்து மட்டும் ஒரு நல்ல ஆட்சியைத் தந்துவிட முடியாது” என அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். மக்களின் செல்வாக்கு என்பது வேறு, சினிமா கவர்ச்சி என்பது வேறு என்பதை அவர் தனது பேச்சில் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.

​மேலும் பேசிய அவர், “அரசியல் கட்சி என்பது வெறும் திட்டங்களைப் பட்டியலிடுவது அல்ல; அதற்குத் தெளிவான கொள்கை வேண்டும். திட்டங்கள் ஒருபோதும் கொள்கையாகாது” எனத் தெரிவித்துள்ளார். “ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அவரிடம் வரலாற்றுச் சுவடுகள் இருக்க வேண்டுமே தவிர, தான் நடித்த படங்களின் பட்டியலை வைத்துக்கொண்டு ‘நான் அரசு அமைப்பேன்’ என்று சொல்வது தேவையற்றது” என அவர் கூறியுள்ளது, தற்போது அரசியலில் கால் பதித்துள்ள முன்னணி நடிகர்களைக் குறிப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நாசரின் இந்த ‘நறுக்’ பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.