தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகக் கூறி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தவெக மாநிலத் துணைச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அரசியல் களத்தோடு ஒப்பிட்டுப் பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. “எம்ஜிஆருக்குப் பிறகு ஒரு மாபெரும் ஆளுமையாக அரசியலுக்கு வர முயன்றவர் ரஜினிகாந்த்; சிஸ்டத்தை மாற்றத் துடித்த அவரை, திமுக குடும்பம் மிரட்டல்கள் கொடுத்து முடக்கிவிட்டது” என அதிரடியாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், மிரட்டல்களுக்குப் பயந்தே ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றும், தற்போது ரெட் ஜெயண்ட் தயாரிப்பிலேயே நடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்றும் அவர் பேசியது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ​ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சுக்கு வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் சோளிங்கர் என். ரவி மிகக் காட்டமான பதிலடியை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அதில், “ரஜினிகாந்த் ஒன்றும் மிரட்டல்களுக்கு அஞ்சுபவர் அல்ல; கொரோனா பேரிடர் காலத்தில் மக்களைக் காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கிலேயே அவர் அரசியலில் இருந்து விலகினாரே தவிர, பயத்தினால் அல்ல” என்று விளக்கியுள்ளார். தனது முடிவால் எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், தன்னை நம்பி வரும் மக்களின் உயிரைக் காப்பதே முக்கியம் என ரஜினி நினைத்ததுதான் உண்மையான மனவலிமை என்று குறிப்பிட்ட அவர், “பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” எனச் சாடி, கூட்டத்தைச் சேர்க்கும் எல்லோரும் தலைவராகி விட முடியாது என தவெக நிர்வாகிகளுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.