விழுப்புரம் அருகே உள்ள சோழகனூர் பகுதியைச் சேர்ந்த சக்திபரதன் என்ற இளைஞர் பால் வியாபாரம் மற்றும் விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ராஜகுமாரி என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நேற்று காலை கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக விரக்தியடைந்த ராஜகுமாரி தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறிவிட்டு வீட்டின் பின்புறம் உள்ள விவசாயக் கிணற்றை நோக்கி ஓடினார்.

தனது மனைவியைச் சமாதானம் செய்ய சக்திபரதன் பின்னால் ஓடிச் சென்றபோதும் அதற்குள் ராஜகுமாரி கிணற்றில் குதித்துத் தத்தளித்தார். இதைப் பார்த்த சக்திபரதன் தனது மனைவியைக் காப்பாற்றுவதற்காகத் துணிச்சலாகக் கிணற்றில் குதித்தார்.

ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அடுத்த சில நிமிடங்களில் ராஜகுமாரியும் நீரில் மூழ்கி பலியானார். இது குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.