இந்திய டி20 அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு, அணி நிர்வாகம் தொடக்கத்தில் உரிய வாய்ப்புகளை வழங்காமல் அநீதி இழைத்ததாக முன்னாள் இந்திய வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். 2024-ஆம் ஆண்டில் அபாரமான பார்மில் இருந்த சஞ்சு சாம்சன், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் 5 இன்னிங்ஸ்களில் 3 சதங்களை விளாசி மிரட்டினார்.
இருப்பினும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் சிறப்பாகச் செயல்பட்டார் என்பதற்காக, டி20 அணியிலும் கில்லுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடியதால் டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது ‘தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது’ என்று மஞ்ச்ரேக்கர் சாடியுள்ளார். கில்லுக்கு வழி விடுவதற்காக, தொடக்க வீரராக அதிரடி காட்டி வந்த சஞ்சு சாம்சன், வரிசையில் கீழிறக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டார்.
ஆசியக் கோப்பையிலும் சஞ்சு சாம்சனுக்குக் கீழ்வரிசையில் பேட்டிங் செய்யும் வாய்ப்பே வழங்கப்பட்டது. குறைவான வாய்ப்புகள் கிடைத்த போதிலும், கில்லை விட சஞ்சு சாம்சன் அதிக ரன்களைக் குவித்து தனது திறமையை நிரூபித்தார். இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சனின் மறுபிரவேசம் குறித்துப் பேசிய மஞ்ச்ரேக்கர், “இது விதியின் விளையாட்டு.
நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடாத சூழல் ஏற்பட்டதும், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது. திலக் வர்மா 3-வது வரிசையில் திணறிய நிலையில், அந்த இடத்தில் சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட்டார். அதுவே அவருக்குரிய சரியான இடம், அவர் அங்கிருந்துதான் தனது வெற்றிக் கதையை எழுதினார்” என்று குறிப்பிட்டார்.
வாய்ப்பு கிடைத்ததும் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட சஞ்சு சாம்சன், நாக்-அவுட் சுற்றுகளில் தனது அதிரடியை வெளிப்படுத்தினார். குறிப்பாக, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் விளாசிய 97* ரன்கள் இந்தியாவை அரையிறுதிக்குக் கொண்டு சென்றது. அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 89 ரன்களும், நியூசிலாந்திற்கு எதிரான இறுதிப்போட்டியில் 89 ரன்களும் குவித்து, மொத்தம் 321 ரன்களுடன் (ஸ்டிரைக் ரேட் 199.37) உலகக் கோப்பைத் தொடரின் நாயகனாக உருவெடுத்தார்.
மேலும் திறமையான வீரர்களை முறையாகக் கையாளத் தவறியதே இந்திய அணியின் தொடக்கக்கால சறுக்கலுக்குக் காரணம் என்பதை சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் இந்தக் கருத்துக்கள் உறுதிப்படுத்துவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
